வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா- இரண்டாவது நாள்!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர்.

விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம்,கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி நாகை மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஒய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிய அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.

சிலர் தென்னங்கன்றுகளை வாங்கி ஆலயத்தில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

Exit mobile version