ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மதுவிலக்கு சட்ட மீறல் வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் நேற்று ஈரோடு ஆணைக்கல்பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதான வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சுஜாதா அவர்களின் நேரடித் தலைமையில் நடைபெற்ற இந்த ஏல நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) விவேகானந்தன் முன்னிலை வகித்தார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை ஆணையர் (DSP) சுகுமார் ஏல நடைமுறைகளை ஒருங்கினைத்து நடத்தினார்.
கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தல் மற்றும் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஏராளமான வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 11 நான்கு சக்கர வாகனங்கள், 5 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 129 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 145 வாகனங்களும், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 12 இருசக்கர வாகனங்கள் என 16 வாகனங்களும் ஏலப் பட்டியலில் இடம்பெற்றன. ஆக மொத்தம் 161 வாகனங்கள் நேற்று பொது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.
இந்த ஏலத்தில் பங்கேற்க ஈரோடு மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் ஆர்வத்துடன் திரண்டனர். ஏலத்திற்கு முன்னதாக வாகனங்களைப் பார்வையிடப் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏல நிபந்தனைகளின்படி, இருசக்கர வாகனங்களுக்கு 2,000 ரூபாயும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாயும் வைப்புத் தொகையாகச் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. வெளிப்படையான முறையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், 123 இருசக்கர வாகனங்கள், 5 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 141 வாகனங்கள் ஏலம் எடுக்கப்பட்டன.
ஏலத் தொகை மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி (GST) உள்ளிட்ட வரிகள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 34 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாயாகக் கிடைத்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். ஏலம் போகாத எஞ்சிய வாகனங்கள் அடுத்தகட்ட ஏலத்தில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை பொது ஏலத்திற்கு விடப்படும் என்ற அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், அரசுக்கு உபரி வருவாய் ஈட்டும் வழியாகவும் அமைந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

















