நெல்லை :
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நம்பும்படி பேசி, திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் தனது சகோதரியை காதலித்தார் என்பதற்காக சுர்ஜித் என்ற இளைஞர், கவினை வெட்டிக்கொலை செய்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் உரையாடிய திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“கவின் அனைவரிடமும் பணிவோடு பழகக்கூடிய நற்செயலாளர். அவரை நயந்து நம்ப வைத்து, குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து கொலை செய்துள்ளனர். இது திடீரென நிகழ்ந்தது அல்ல, திட்டமிட்டு நடந்த கொலை” என்றார்.
மேலும்,
“சுர்ஜித்தின் சமீபத்திய சமூக வலைதளப் பதிவுகளை பார்க்கும்போது, கத்தியுடன் தினமும் பகிர்ந்த புகைப்படங்கள், சம்பவம் நடைபெறப்போகும் முன்சுடர்விளக்காக தெரிகின்றன. சுர்ஜித் கவினிடம் எதிர்ப்பு காட்டவில்லை, நெருக்கமான உறவாகவே இருந்துள்ளார். அந்த நம்பிக்கையில்தான் கவின் அவரை சந்திக்கச் சென்றார்” என கூறினார்.
தொடர்ந்து
“இந்த சம்பவத்தில் சுர்ஜித்தின் தாய், தந்தை இருவரும் தெரியாமலோ, தெரிந்தோ தொடர்புடையவர்கள் என சந்தேகம் உள்ளது. அவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்தி, சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும், நீதியும் வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
அதேசமயம்,
“கவின் காதலித்ததாக வீடியோ வெளியிட்ட பெண், யாருடைய கட்டுப்பாட்டில் இருந்து அச்சுறுத்தலால் அந்த வீடியோவை வெளியிட்டார் என்பது தெளிவாகவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.