‘அம்மா’வின் அன்பைப் பெற்ற வத்திராயிருப்பு ‘மோதிரம்’ பொன்னுச்சாமி ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டி!

தமிழக அரசியல் வரலாற்றில் பதவிகளுக்காகப் பலரும் முட்டி மோதிக்கொள்ளும் சூழலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடமே “எனக்கு ஒன்றும் வேண்டாம், உங்களைப் பார்த்ததே போதும்” என்று கூறி வியக்க வைத்த ஒரு தீவிர விசுவாசி, தற்போது தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட, வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த 75 வயதான மோதிரம் பொன்னுச்சாமி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கோட்டைக்கோ அல்லது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்தோ வெளியே வரும்போதெல்லாம், ஒரு முதியவர் கைகளில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்ட மோதிரங்களை வரிசையாக அணிந்துகொண்டு, தலைகுனிந்து மிகுந்த மரியாதையுடன் வணங்கியபடி நிற்பது அன்றைய வழக்கமான காட்சியாக இருந்தது. ஒருநாள் இவரது விசுவாசத்தைக் கண்டு வியந்த முதல்வர் ஜெயலலிதா, இவரை நேரில் அழைத்து “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கனிவுடன் கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காத பொன்னுச்சாமி, “எனக்கு ஒன்றும் வேண்டாம் அம்மா, உங்களைப் பார்த்ததே எனக்குக் கோடி புண்ணியம்” என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதன் பின்னர் அதிமுக தலைமைச் செயலகத்தில் பூங்குன்றன் அவர்கள் கேட்டபோது கூட, தனக்கு எந்தப் பலனும் தேவையில்லை என்று கூறித் தனது கொள்கை உறுதியை வெளிப்படுத்தியவர் இந்த மோதிரம் பொன்னுச்சாமி. இத்தனை காலமும் எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தனது பாசத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு கட்சிக்காக உழைத்தவர், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட முன்வந்துள்ளார். 75 வயதிலும் குறையாத அதே உற்சாகத்துடனும், “அம்மா”வின் விசுவாசி என்ற பெருமையுடனும் அவர் தனது தேர்தல் பணிகளுக்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறார். சுயநலமற்ற ஒரு தொண்டரின் இந்த முயற்சி அதிமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version