ராஜஸ்தானில் கூகுள் மேப்பில் காட்டிய வழியை பின்பற்றிச் சென்ற வேன் பனாஸ் ஆற்றில் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
சித்தோர்கர் மாவட்டம் கனகேடா கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர், பில்வாராவில் உள்ள சவாய் போஜ் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை 1 மணியளவில், 9 பேரை ஏற்றிச் சென்ற வேன் கூகுள் மேப்பில் காட்டிய வழியை பின்பற்றி செல்லும் போது, போக்குவரத்து தடை செய்யப்பட்ட பாதையில் நுழைந்து பனாஸ் ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு வயது சிறுமி உள்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது :
“குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூகுள் மேப்பில் அந்த அப்டேட் செய்யப்படாததால், பாதையை பின்பற்றி சென்ற வேன் ஆற்றில் விழுந்தது” என்றனர்.
அதிகாலை பயண எச்சரிக்கை
இவ்விபத்து, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாகன பயணத்தின் அபாயத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. தூக்க கலக்கத்தால் வாகனம் ஓட்டும் போது கவனச்சிதறல் ஏற்பட்டு, பெரிய விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளதால், அவ்வாறு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.