சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்துவின் உரை, அரசியல் மற்றும் மத வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கம்ப ராமாயணத்தை மேற்கோள்காட்டி பேசிய வைரமுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 84ஆம் பிரிவை சுட்டிக்காட்டி, “மதி மாறுபாட்டால் ராமன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்தி கொன்றது குற்றமன்று. கம்பனால் மன்னிக்கப்பட்ட ராமன் மனிதனாகிறார்; கம்பன் கடவுளாகிறார்” எனக் கூறினார். இதன் மூலம், “கடவுள் ராமர் புத்திச் சுவாதீனம் இல்லாதவர்” என்ற கருத்தை அவர் முன்வைத்ததாகவும், அதனால் இந்து மத வழிபாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த கருத்துக்கு எதிராக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. முதல்வர் வைரமுத்துவின் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல், பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், வைரமுத்துவுக்கு நெருக்கமானவர்கள், இந்த சர்ச்சையை நிராகரித்து, “இது மத சொற்பொழிவு அல்லது அரசியல் பேச்சு அல்ல; கம்பனின் கவிதை மேதைமையை முன்னிறுத்திய இலக்கிய விளக்கம் மட்டுமே. ராமரை மனிதாபிமானப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டதாகும். ராமர் வாலியை கொன்ற அத்தியாயத்தை, சீதையை இழந்த பிறகான மனநிலைப் பின்னணியில் விமர்சித்தார்” எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துகளும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. அதேபோல், பாடகி சின்மயி முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்திலும் அவர் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.