திருச்சி :
“தமிழ்நாட்டில் மக்கள் ஒருபோதும் கூட்டணி ஆட்சியை ஏற்கமாட்டார்கள். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க மக்கள் முடிவெடுப்பார்கள்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது :
நாங்கள் திமுக கூட்டணியில் உறுதியாக உள்ளோம். இந்துத்துவ சக்திகளால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ஆபத்திலிருந்து தமிழகத்தை காக்கவே திமுக கூட்டணியில் நாங்கள் இணைந்துள்ளோம். இது கொள்கை அடிப்படையிலான ஒரு கூட்டணி திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி உள்ளது. அதேபோல், மதிமுகவும் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உள்ளது.
“திமுக வெற்றிக்கு நாங்கள் எங்களது பங்களிப்பைச் செலுத்துவோம் என்பதே எங்கள் நோக்கம்.”
அத்துடன், வரும் செப்டம்பரில் திருச்சியில் நடைபெற உள்ள அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் இந்த கோட்பாட்டைத் தெளிவாக விளக்குவதாகவும் அவர் கூறினார்.
மேலும்,
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்றே மக்கள் விரும்புவதில்லை. கூட்டணி ஆட்சி வரவேண்டும் என்கிற பேச்சுக்கே வாய்ப்பு இருக்காது. திமுக கூட்டணியை பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்வார்கள். இந்த முடிவை அமித்ஷா நிச்சயமாக காணப்போகிறார்” என்றார் வைகோ.
முன்னாள் கட்சி உறுப்பினரான மல்லை சத்யா குறித்து அவர் கூறுகையில்,
“கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் கட்சிக்கு விசுவாசமாக செயல்படவில்லை. அவரைப்பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.