தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், 2023ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற பிறகு பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்பட்ட அவர், மாநில அரசியலில் முக்கியமான தலைவராக உருவெடுத்து, நவீன் பட்நாயக்கின் சார்பில் ஹெலிகாப்டரில் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவரை நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்றும் அப்போது தகவல்கள் வெளியாகின. அரசு சார்ந்த அனைத்து முடிவுகளையும் பாண்டியன் எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. தேர்தல் பிரசார காலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இவரை கடுமையாக விமர்சித்தன.
2024 சட்டசபைத் தேர்தலில் பிஜேடி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாண்டியன் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்திக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவரைச் சந்திக்க பாண்டியன் உடனே வந்தார். மும்பை மருத்துவமனையில் இருந்தும், தற்போது புவனேஸ்வர் மருத்துவமனையிலும் நவீன் பட்நாயக்குடன் பாண்டியன் இணைந்தே இருந்து பராமரித்து வருகிறார்.
ஆனால், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியிடப்படாமல் இருப்பது பிஜேடி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிஜேடி எம்எல்ஏ ரணேந்திர ஸ்வைன் உள்ளிட்ட சிலர் பாண்டியனை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
நேற்று பிஜேடி எம்.பி. தேபாஷிஷ் சமந்தராய், “நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்காதது மிகப்பெரிய தவறு. தகவல்களை மறைத்து வைக்க வி.கே. பாண்டியன் முடிவு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் கட்சி பலவீனமடைந்து வருகிறது. ஒடிசா அரசியல் குறித்து பாண்டியனுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
 
			















