அமெரிக்காவில் வெளிநாட்டினர் ஆவணங்கள் ஆய்வு: விசா ரத்து நடவடிக்கை தீவிரம்

அமெரிக்காவில் விசா வைத்திருக்கும் வெளிநாட்டினரின் ஆவணங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், குடியேற்றக் கட்டுப்பாடுகள், நாடுகடத்தல், விசா விதிமுறைகள் மாற்றம் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் பகுதியாக, அமெரிக்காவில் உள்ள 5.5 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினரின் ஆவணங்களை வெளியுறவுத்துறை ஆய்வு செய்து வருகிறது.

விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கு தகுதியானவர்களா என்பதைத் தீர்மானிக்க இந்தச் சோதனை நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவர். ஆவணங்களில் முரண்பாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அவர்களின் விசா ரத்து செய்யப்படும்; ஏற்கனவே அமெரிக்காவில் இருந்தால், நாடு கடத்தப்படுவார்கள் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

லாரி ஓட்டுநர் விசா நிறுத்தம்
விசாவில் குறிப்பிடப்பட்ட காலத்தை மீறி தங்குதல், குற்றச்செயல்கள், பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது அதனை ஆதரித்தல் போன்ற காரணங்கள் விசா ரத்துக்கான அடிப்படையாக இருக்கும். இதுபோன்றவர்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக விசா ரத்து செய்து நாடு கடத்தப்படும் என்று வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், ட்ரம்ப் தலைமையகத்திற்குள் சமீபத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, லாரி ஓட்டுநர்களுக்கான விசா வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதேசமயம், அமெரிக்காவில் லாரி ஓட்டுநர்கள் ஆங்கிலம் பேசவும் படிக்கவும் கட்டாயம் என ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதங்களில் 6,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள், பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டின் பேரில் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத குடியேற்றம் அதிகரிப்பு
மறுபுறம், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் 2023-ஆம் ஆண்டில் 1.4 கோடியை எட்டியுள்ளதாக பியூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் மெக்சிகோ, குவாத்தமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ் மற்றும் இந்தியா முதலிடத்தில் உள்ளன. மேலும், வெனிசுலா, கியூபா, கொலம்பியா போன்ற நாடுகளிலிருந்து குடியேறுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளது.

ஆனால், ட்ரம்ப் கொண்டு வந்த புதிய கட்டுப்பாடுகளால் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிக்கை கூறுகிறது.

Exit mobile version