சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயல் இயக்குனராக, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பணவீக்க இலக்கு (Inflation Targeting Framework) கட்டமைப்பை உருவாக்கிய பொருளியலாளர்களில் ஒருவராக விளங்கும் உர்ஜித் படேல், 2016-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் 24வது கவர்னராக பொறுப்பேற்றார். ஆனால், 2018-ஆம் ஆண்டு தனிப்பட்ட காரணங்களால் அவர் ராஜினாமா செய்தார்.
அதற்கு முன்பு, மத்திய வங்கியின் துணை கவர்னராகப் பணியாற்றிய அவர், பணவியல் கொள்கை, பொருளாதார ஆராய்ச்சி, புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளை கவனித்திருந்தார்.
கென்யாவில் பிறந்த உர்ஜித் படேல், தனது ஆரம்பகால பணிக்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றிய அனுபவமுள்ளவர். 1990களில் வாஷிங்டனில் பணியாற்றிய அவர், பின்னர் 1992-ஆம் ஆண்டு ஐஎம்எப்-ன் டில்லி அலுவலகத்திலும் பணியாற்றினார்.
இந்நிலையில், மூன்று தசாப்தங்கள் கழித்து, மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குனராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.