ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு வரை சிறை – தமிழக அரசு எச்சரிக்கை

ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால், குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைக்காது. ஆம்புலன்ஸ் சேதமடைந்தால், அதற்கான செலவையும் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டியிருக்கும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, துறையூரில் நேற்று நடந்த சர்ச்சையைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. அங்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது, ஒரு ஆம்புலன்ஸ் கூட்டம் கூடிய இடம் வழியாக சென்றது.

உள்ளே நோயாளி யாரும் இல்லாததால், சில அ.தி.மு.க.வினர், வேண்டுமென்றே கூட்டத்துக்குள் ஆம்புலன்சை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டி, டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை சிக்கலாக மாறிய நிலையில், போலீசார் தலையிட்டு, வாகனத்தை பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, எதிர்காலத்தில் ஆம்புலன்ஸ் சேவைக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்கும் யாருக்கும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

Exit mobile version