இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்டை விண்ணில் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது :
“ககன்யான் திட்டத்தில் தற்போது 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள், ஆளில்லா ராக்கெட்டை ஏவ உள்ளோம். அதில் வயோமித்ரா எனப்படும் இயந்திர மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இது ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சாதனம். விண்வெளித் துறையில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் முக்கிய முன்னேற்றமாக இது அமையும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது :
“இத்திட்டம் வெற்றியடைந்த பின், இரண்டு ஆளில்லா ராக்கெட்டுகளை அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் 2027 மார்ச் மாதத்தில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டம் உள்ளதாகவும் ககன்யான் திட்டத்தில் இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் செய்ய வேண்டியுள்ளதையும்” தெரிவித்தார்.
1962ஆம் ஆண்டு தொடங்கிய இந்தியாவின் விண்வெளி திட்டம் உலகளவில் பல சாதனைகளை படைத்துள்ளதாகவும், நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல்நாடு இந்தியாவாகும் என்றும், சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதை முதன்முதலாக கண்டறிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “ரஷ்யா ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக் கோள்களை ஏவியிருந்த நிலையில், இந்தியா ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை அனுப்பி உலக சாதனை படைத்தது. இதுபோன்ற சாதனைகள் மாணவர்களுக்கு விண்வெளித் துறையில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது,” என்றார்.