ராமநாதபுரம்: ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற சேது விரைவு ரயிலின் ஓட்டுநர் சுறுசுறுப்பான சிந்தனையால், ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்ட சேது விரைவு ரயில், ராமநாதபுரத்தை கடந்துவிட்டு வாலாந்தரவை ரயில்வே கேட் அருகே வந்தபோது, அங்கு கேட் மூடப்படாமல் இருந்தது. இதனை கவனித்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
பின்னர் அவர் கீழே இறங்கி, கேட்டை மூடும்படி கீப்பரிடம் அறிவுறுத்தினார். ஏன் கேட் மூடப்படவில்லை என கேட்டபோது, தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என கீப்பர் விளக்கம் அளித்தார். எனினும் அப்பகுதி பொதுமக்கள், இது கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் எனக் குற்றம் சாட்டினர்.
பின்னர் கேட் மூடப்பட்டதைத் தொடர்ந்து, சேது விரைவு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. ஓட்டுநரின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, ரயில்வே கேட் மூடப்படாத நிலையில் பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நினைவுகூரத்தக்கது. அப்போது ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்தது.
அதேபோல, இப்போது ராமநாதபுரம் அருகே ரயில் பைலட்டின் சுறுசுறுப்பு காரணமாக, இன்னொரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.