மதுரை: மத்தியில் பல்வேறு கூட்டணி ஆட்சிகளில் தி.மு.க. அங்கம் வகித்தபோது அவர்களின் நிலைப்பாட்டையும், ‘அடிமைச் சாசனம்’ பற்றிய வரலாற்றையும் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மக்கள் சேவையிலும் விசுவாசத்திலும்தான் அடிமையாக இருக்கிறார் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வில் ஆரம்ப காலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தொண்டர்களின் பாசத்தை இணைத்து கட்சியைத் தொடங்கினார். ஆனால், அக்கட்சி பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பக் கட்சியாக மாறி, மன்னர் ஆட்சியை உருவாக்க நினைத்தபோது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களாட்சியை மலரச் செய்து, தமிழகத்திற்குப் பொற்கால ஆட்சியை அமைத்து சேவை செய்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும், அதைத் தொடர்ந்து, ஒரு சாமானியராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமி அவர்களும் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, மக்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளனர்.
தி.மு.க. அரசு மத்தியில் இடம் பெற்றிருந்தபோது, பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகித்த வரலாற்றை உதயநிதி ஸ்டாலின் கவனிக்க வேண்டும். அ.தி.மு.க.வைப் பற்றி ‘அடிமை’ வார்த்தையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பேசுவதற்கு முன்னர், தி.மு.க.வின் இந்தக் கூட்டணி வரலாற்றை அவர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என உதயகுமார் வலியுறுத்தினார்.
கடந்த 52 ஆண்டுகளில் சுமார் 32 ஆண்டுகள் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி செய்து மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களாட்சி மலர தமிழக மக்கள் தயாராகி விட்டனர். இந்த மக்கள் செல்வாக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உதயநிதி ஸ்டாலின் செல்லும் இடங்களிலெல்லாம் அ.தி.மு.க.வின் செல்வாக்கு குறித்தும், பழனிசாமி குறித்தும் கிண்டலாகப் பேசுவதைக் கொள்கையாக வைத்துள்ளார்.
சுமார் ஐம்பதாண்டு காலம் பொதுவாழ்வில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆரோக்கியமான விமர்சனத்தை வைக்காமல், விளையாட்டுப் பிள்ளையாக நீங்கள் மக்கள் முகம் சுளிக்கும் வகையில், அரசியல் நாகரிகம் இல்லாமல் எல்லை தாண்டிப் பேசுவதைப் பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதயநிதியின் இந்த விமர்சனப் பேச்சுகள் அவருக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல.
இன்று எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழக மக்கள் மீதுள்ள பாசத்தாலும், விசுவாசத்தாலும், அவர்களின் எதிர்கால அர்ப்பணிப்பு, தியாகம், மற்றும் சேவைக்குத்தான் அடிமையாக உள்ளார். தி.மு.க. அரசின் ஏமாற்று நாடகம் ஒரு நாள் முடிவுக்கு வரும். இன்றைய தி.மு.க. ஆட்சி முடிவடைய இன்னும் சுமார் 3 மாதங்களே உள்ளன. 2026-ஆம் ஆண்டில் உதயநிதியும் தி.மு.க.வும் வீட்டுக்குப் போவார்கள், எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் கோட்டைக்குச் செல்வார் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

















