இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் தொகுதி வாரியாக நிர்வாகிகளுடனான சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை காஞ்சிபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்தில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த பயணத்தின் போது, ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட தொண்டர்களை கவுரவித்து, தன்னார்வலர்களுடன் கலந்துரையாடவும் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என்று திமுக தெரிவித்துள்ளது.

Exit mobile version