ஒரே குடியிருப்பில் இரண்டு மனைவிகள் : நடிகர் சரவணன் மீது முதல் மனைவியின் பரபரப்பு புகார்

1990-களில் ‘வைதேகி வந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான சரவணன், பின்னர் பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இடைவெளிக்குப் பிறகு, 2007-ல் வெளிவந்த பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் மறுபடியும் ரசிகர்களிடம் பிரபலமானார். சமீபத்தில் கோலமாவு கோகிலா, ஜெயிலர் போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.

சரவணன், 2003 ஆம் ஆண்டு சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர், 2019 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்ற பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். தற்போது மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் தனியாக வசித்து வந்துவருபவர் முதல் மனைவி சூர்யஸ்ரீ.

இந்நிலையில், சூர்யஸ்ரீ பொதுமக்கள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் அளித்த புகாரில்,

தானும் சரவணனும் 1996 முதல் 2003 வரை திருமணமின்றி இணைந்து வாழ்ந்ததாகவும்,

2003-ல் திருமணம் நடந்த பின் தனது தொழில்வருமானத்தில் சரவணனுக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும்,

ஆனால் தற்போது அவர், இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், 2015-இல் மாதம் ரூ.90,000 பராமரிப்பு தொகை தருவதாகவும், தனது பெயரில் வீடு பதிவு செய்வதாகவும் சரவணன் ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் அதை நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தன்னிடம் 40 லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகை கேட்கப்பட்ட நிலையில், 10 லட்சம் மட்டுமே காசோலையாக வழங்கியதாகவும் சூர்யஸ்ரீ புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்குக் காரணம் சரவணனும் அவரது இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியும் தான்” என குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், நடிகர் சரவணன், “யாரையும் மிரட்டவில்லை. முதல் மனைவியுடன் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அவர் தான் என்னை மிரட்டுகிறார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version