புதுடில்லி: கல்வித்துறையில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, இன்று புதுடில்லியில் நடைபெற்றது.
இந்த விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் ஓர் அங்கமாக, ஆண்டுதோறும் கல்வியில் சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து இருவர், புதுச்சேரியில் இருந்து ஒருவர் உட்பட மொத்தம் 45 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வாகினர்.
அதில், சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.
இந்த விருதுகளை ஜனாதிபதி நேரடியாக வழங்கியதால், மாநிலத்துக்குப் பெருமை சேர்த்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.