ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாய்க்காலில் குளிக்கச் சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் இருவர், ஆழமான நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று நடைபெற்றது.
கோவை, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜின் மகன் சிபிராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் சக்தி நிகேஷன் ஆகியோர், கோவையின் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரிஷிகுமார், ஜெய்ஹரிஷ், வினோத்குமார் ஆகியோர்களுடன் காரில் டி.என்.பாளையம் அருகே வந்தனர். இவர்கள் அனைவரும் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகின்றனர்.
நேற்று மதியம் 1 மணியளவில், வாணிப்புத்தூரில் தொட்டிபாலம் பகுதி வாய்க்காலில் ஐவர் குளிக்கச் சென்றனர். இதில் மூவர் கரைக்கு வந்த நிலையில், சிபிராஜ் மற்றும் சக்தி நிகேஷன் ஆழமான பகுதிக்குச் சென்று நீந்த முயன்றபோது, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர்.
இதை கண்டு மற்ற நண்பர்கள் கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றும் அவர்களை மீட்க முடியவில்லை. தகவலறிந்த பங்களாப்புதூர் போலீசார், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அனுப்பினர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சிறிது நேர தேடுதல் பணிக்குப் பிறகு இருவரின் உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம், அந்த பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியது.














