தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் அரசியல் பிரச்சாரம் நடத்த காவல்துறைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி, கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய் ஏற்கனவே இரண்டு மாநாடுகளை நடத்தி, சமீபத்தில் திருச்சியில் பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். அங்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் நகரமே செயலிழந்தது. கூட்ட நெரிசலால் திட்டமிட்டபடி விஜய் பிற இடங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனை தொடர்ந்து, பிரச்சாரம் தொடர்பாக காவல்துறை அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதாக தவெக குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், தவெக துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுவில், “மற்ற அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு இத்தகைய கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. ஆனால், விஜய் பிரச்சாரத்திற்கு மட்டும் பாரபட்சமான தடைகள் விதிக்கப்படுகின்றன. கடந்த காலத்தில் தவெக சார்பில் நடத்தப்பட்ட தர்ணா, பூத் ஏஜெண்ட் கூட்டம், மாநாடுகள் அனைத்தும் அமைதியாக முடிந்துள்ளன. எனவே, டிசம்பர் 20 வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு காவல்துறை அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிக்க வேண்டும் என நீதிபதி என். சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது. ஆனால் நீதிபதி, அவசர விசாரணைக்கு மறுப்பு தெரிவித்தார். வழக்கை நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.