தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21) மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நடைபெறும் இந்த மாநாட்டில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பங்கேற்கும் ராம்ப்வாக் மேடை, பொதுமக்கள் அமரும் பகுதிகள், கழிப்பிடங்கள், மருத்துவ வசதிகள், வாகனங்களுக்கு பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பெருமளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், மாநாட்டுத் திடலில் நிறுவப்பட்டிருந்த சுமார் 100 அடி உயர கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்தது. மாநாட்டின் தொடக்கமாக நடிகர் விஜய் கொடி ஏற்றவிருந்த அந்தக் கம்பம், கிரேன் மூலம் நிறுவும் பணியின் போது, கிரேனில் கட்டப்பட்ட கயிறு கழன்றதால் கீழே சாய்ந்து அருகிலிருந்த கார் மீது விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்தக் காருக்குள் யாரும் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தற்போது கொடிக்கம்பம் மீண்டும் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.