சென்னை :
தேமுதிக நிறுவனர், மறைந்த புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று கட்சியினர் மற்றும் பொதுமக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தேமுதிக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல், சினிமா உலகினரிடமிருந்து பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய விஜய், “எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் என் அண்ணன் கேப்டன் விஜயகாந்துடன் நெருக்கமாக பழகும் பாக்கியம் கிடைத்தது” என்று கூறியிருந்தார். இதனால், விஜய் தேமுதிக வாக்கை குறிவைக்கிறார் என்ற அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “விஜய் சிறுவயது முதல் விஜயகாந்தை பார்த்து வந்தவர். எப்போதும் அவர் எங்களுடைய பையன்தான். விஜயகாந்த் பெயரை சொல்லி விஜய் வாக்குகளை பெறுகிறார் என்றால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜயகாந்தின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது” என்று தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில், விஜயகாந்தின் பிறந்தநாளில் விஜய் தெரிவித்துள்ளார் என்ற வாழ்த்து பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
















