ஈரோடு :
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்க உள்ள மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் நாளை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தவெக கட்சியில் இணைந்த நிலையில், அவருக்கு கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவரது சொந்த மாவட்டமான ஈரோட்டில் நடைபெறும் இந்தப் பிரசார கூட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அங்கு வந்தார். அவருடன் செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட தலைவர் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் சிலர் புஸ்ஸி ஆனந்தை மாலையிட்டு வரவேற்க முயன்றனர். இதற்கு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஈரோடு போல தர்மபுரி மாவட்டத்திலும் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பேச விடாமல் தடுக்கப்பட்டதாக தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் குற்றம்சாட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக, அதிருப்தியில் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் மாலையை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளை நடைபெற உள்ள விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு முன்னதாக ஏற்பட்ட இந்த சம்பவம் தவெக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
