சென்னை: அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 ஆண்டுகளாக குற்றவாளிகள் கைதாக்கப்படாமல் இருந்த நிலையில், திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தலைமையில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
2012 மார்ச் 29-ஆம் தேதி, திருச்சி தில்லைநகரில் நடைபயிற்சி சென்ற ராமஜெயம், காரில் கடத்திச் செல்லப்பட்டு திருச்சி–கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச்சோலை பகுதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டு, உடல் இரும்புக் கம்பியால் சுற்றப்பட்டிருந்தது.
கடந்த 13 ஆண்டுகளாக, திருச்சி மாநகர போலீசும் சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தியபோதிலும், குற்றவாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது வெளிச்சம் பார்க்கவில்லை. தற்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
முன்னாள் விசாரணை அதிகாரி எஸ்.பி. ஜெயகுமார் மாற்றப்பட்டதால் விசாரணையில் இடைஞ்சல் ஏற்பட்டது. இதையடுத்து, திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார், தஞ்சாவூர் எஸ்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வருண்குமார், தற்போது சென்னையில் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டாலும், விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
ரவுடிகளை மையப்படுத்தி விசாரணை
வருண்குமார், திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி சுடலைமுத்துவிடம் வாக்குமூலம் பதிவு செய்தார். அதன் அடிப்படையில், அவரது கூட்டாளி மற்றும் திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த ரவுடி ‘குணா’விடம் விசாரணை நடைபெற்றது.
போலீஸ் தகவலின்படி, திருச்சியில் பிச்சமுத்து, முட்டை ரவி, மணல்மேடு சங்கர் உள்ளிட்ட ரவுடிகள் அட்டூழியம் செய்து வந்தனர். இவர்களில் முட்டை ரவியின் மூளையாக இருந்தவர், இலங்கை தமிழரான மணச்சநல்லூர் குணசீலன் (குணா). முட்டை ரவியின் ‘என்கவுன்டர்’ மரணத்திற்கு ராமஜெயம் காரணம் என குணா எண்ணி, அவரைக் கொல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
குணாவின் வலது கை மனிதர் சுந்தரபாண்டியன், புல்லட் மனோகர் கொலை வழக்கிலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த கொலை, ராமஜெயம் கொலை பாணியிலேயே நடந்தது. மேலும், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம் இலங்கை மடக்களப்பு பகுதி கொலை பாணியுடன் ஒத்திருக்கிறது.
புதிய ஆதாரங்கள்
விசாரணை வளையத்தில் 13 ரவுடிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ராமஜெயம் வாயில் திணிக்கப்பட்டிருந்த துணி, காரில் தொங்கியிருந்த திரைச்சீலை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, புதிய கோணத்தில் நடக்கும் இந்த விசாரணை, 13 ஆண்டுகளாக மர்மமாக இருந்த ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.















