மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரை குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா அளித்த பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “காமராஜரைப் பற்றி பேச திருச்சி சிவாவுக்கு தகுதியில்லை” என்று கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசும்போது,
“மின்சார தட்டுப்பாட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டம் நடத்திய காமராஜருக்கு, ஏசி வசதி இல்லையெனில் உடலில் அலர்ஜி ஏற்படும். அவர் தங்கும் இடங்களில் குளிர்சாதன வசதி வழங்க உத்தரவிட்டார்.
உயிர் போவதற்கும் முன் கலைஞர் கருணாநிதியின் கைகளை பிடித்து, ‘நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுங்கள்’ என கேட்டுக் கொண்டார்,”
என்றார்.
இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி சிவாவை கண்டித்த செல்வப்பெருந்தகை,
“காமராஜர் பற்றி பேச திருச்சி சிவாவுக்கு தகுதியில்லை. ஆதாரம் இல்லாமல் பேசியுள்ளார். காமராஜரை குறை கூற யாருக்கும் உரிமை இல்லை,”
என்றார்.
காமராஜரின் இறுதி தருணத்தில் அவர், “வைரவா, அந்த விளக்கை அணை” எனக் கூறி உறங்க சென்ற பின் உயிர் பிரிந்தது என்பது பொதுவாக அறியப்பட்ட வரலாறு. இந்தச் செய்தியால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.