அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்கா – அமெரிக்கர்களுக்கே” என்ற கொள்கையை மையமாகக் கொண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மேலும் ஏழு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான முழுமையான தடையை அவரது நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேசிய மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள், போதிய பின்னணி சரிபார்ப்பு நடைமுறைகள் இல்லாமை, விசா காலாவதி பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லாவோஸ், சியரா லியோன், புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட உள்ளது. இந்த உத்தரவு வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கு முன், கடந்த நவம்பர் மாத இறுதியில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ‘கவலைக்குரிய நாடுகள்’ என வகைப்படுத்தப்பட்ட 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டுகள் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS)-க்கு ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், ஹைட்டி, கியூபா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நாடுகளைச் சேர்ந்த நிரந்தர குடியிருப்பாளர்களின் ஒவ்வொரு கிரீன் கார்டும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முழுத் தடையுடன் கூடுதலாக, அங்கோலா, நைஜீரியா, செனகல், தான்சானியா, சாம்பியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 15 நாடுகளுக்கு பகுதி நுழைவுக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பகுதி கட்டுப்பாட்டில் இருந்த லாவோஸ் மற்றும் சியரா லியோன் தற்போது முழுத் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், காசாவில் நடைபெற்று வரும் மோதல்களின் பின்னணியில், பாலஸ்தீன ஆணையம் வழங்கிய பயண ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த உத்தரவு சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள், ஏற்கனவே விசா பெற்றவர்கள், சில விசா வகைகள் மற்றும் அமெரிக்க தேசிய நலனுக்காக செயல்படுபவர்கள் ஆகியோருக்கு விதிவிலக்குகளை வழங்குகிறது.
முன்னதாக, ட்ரம்ப் தனது முதல் ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடை விதித்திருந்தார். அந்த உத்தரவு நீதிமன்ற சவால்களை சந்தித்த போதிலும், 2017ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதனை உறுதி செய்தது. பின்னர், 2021ஆம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் அந்த பயணத் தடையை ரத்து செய்திருந்தார்.
தற்போது மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள ட்ரம்ப், குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருவது, உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

















