சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் மினி பேருந்து விபத்தில் படிக்கட்டில் பயணித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினசரி சிவகங்கையிலிருந்து சூரக்குடி நோக்கி ஒரு தனியார் மினி பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை, அதே பேருந்தில் ஏனாபுரம் கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் சந்தோஷ் மற்றும் புதுப்பட்டியை சேர்ந்த சூர்யா ஆகியோர் படிக்கட்டில் நின்றபடி பயணித்ததாக கூறப்படுகிறது.
ஆதம் பள்ளிவாசல் அருகே வளைவில் சென்றபோது, அந்த மினி பேருந்து முன் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை முந்த முயன்றது. அந்த சமயத்தில் பள்ளி வாகனத்தின் பின்புறம், மினி பேருந்தின் படிக்கட்டு இடித்து உரசியதில், படிக்கட்டில் நின்றிருந்த சந்தோஷ் மற்றும் சூர்யா இருவரும் வாகனங்களுக்கு இடையில் சிக்கி கடுமையாக காயமடைந்தனர்.
உடனே இருவரும் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மருத்துவர்கள் பரிசோதித்தபோது சந்தோஷ் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தினர். சூர்யா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரின் மரணம் மாவட்டம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
