அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரபல புண்ணிய ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் இன்று ஏகாதசி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் தள்ளுமுள்ளாகி தரையில் விழுந்து நசுங்கினர். இதில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்த பலர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவ இடத்தில் உள்ளூர் நிர்வாகம் முழுமையாக ஈடுபட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

















