பத்தனம்திட்டா அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலில் 18 வன தேவதைகள் பாரம்பரிய சிறப்பு ஆராதனை

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலில், பக்தர்களின் வாழ்வில் நல்வாழ்வும் செழிப்பும் அருளும் அபூர்வமான 18 படி பூஜை மிகுந்த ஆன்மீக ஒளியுடன் நடைபெற்றது. இந்த விசேஷ பூஜையில், 18 வன தேவதைகள் ஒவ்வொரு திருப்படியிலும் அமர்த்தப்பட்டு, பாரம்பரிய முறையில் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது தொன்மையான ஐதீகமாக நம்பப்படுகிறது.

இந்த பூஜைக்கான முன்னேற்பாடுகளாக, சபரிமலையின் 18 திருப்படிகளும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, ஒவ்வொரு படியிலும் நிலை விளக்குகள் ஏற்றி தீபாராதனை செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் மற்றும் ஐயப்பன் நாம சங்கீர்த்தனம் முழங்க, பூஜை மிகுந்த பக்தியுடனும் ஆன்மீக ஒழுங்குடனும் நடைபெற்றது.

இந்த விசேஷ படி பூஜையை சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு அவர்கள் தலைமையேற்று நடத்தினார். பாரம்பரிய ஆகம விதிகளுக்கு அமைவாக, முறையான சடங்குகளுடன் பூஜை சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

பூஜை நிகழ்ச்சியின் போது தமிழ் பாரம்பரிய தவில் மற்றும் நாதஸ்வர மேள வாத்தியங்கள் முழங்க, சபரிமலை மலைமேல் ஆன்மீக சூழல் நிரம்பியது. திரளாக கூடியிருந்த பக்தர்களின் ‘ஐயப்பன் சரணம்’ கோஷங்கள் காடுகளை கடந்து விண்ணைத் தொட்டன. “ஐயப்பன் சரணம்” என்ற கோஷங்கள் மலை முழுவதும் எதிரொலித்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அய்யப்பனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

பூஜை நிறைவடைந்ததையடுத்து, பக்தர்களுக்கு புனிதமான 18 திருப்படிகளை ஏறி, தர்ம சாஸ்தா ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. நீண்ட நேர காத்திருப்பிற்குப் பிறகு, ஒழுங்கான வரிசையில் பக்தர்கள் ஒவ்வொருவராக திருப்படிகளை ஏறி, கர்ப்பகிரகத்தில் உள்ள ஐயப்பனை தரிசனம் செய்து வணங்கினர். இதனால் பக்தர்கள் மன நிறைவுடனும் பரவசத்துடனும் காணப்பட்டனர்.

இந்த 18 படி பூஜைக்கு ஒருவருக்கு ரூ.1,37,900 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், சபரிமலை கோயிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளிலும் இது அதிக கட்டணமுள்ள பூஜை என்று சொல்லப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்ததாக தேவஸ்வம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த படி பூஜையில் பங்கேற்பதால் குடும்ப நலம், தொழில் வளர்ச்சி, நோய் நீக்கம், சந்தான பாக்கியம், பொருளாதார முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது. பல பக்தர்கள், ஆண்டாண்டு காலமாக இந்த பூஜையில் பங்கேற்பதையே ஒரு விரதமாக கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

சபரிமலையின் 18 திருப்படிகள் மனித வாழ்க்கையின் 18 நிலைகளை குறிக்கும் ஆன்மீக உயர்வின் படிகள் என்றும், ஐயப்பனின் தத்துவத்தை வெளிப்படுத்தும் புனித அடையாளம் என்றும் அறிஞர்கள் விளக்குகின்றனர். ஒவ்வொரு படியும் மனிதனின் அகநலத்தை விட்டு, இறைநிலை நோக்கி முன்னேறும் பாதையை சுட்டிக்காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், இந்த அபூர்வமான 18 படி பூஜை பாரம்பரியம், ஆன்மீகம் மற்றும் பக்தர்களின் நம்பிக்கையை ஒன்றிணைக்கும் சிறப்பு நிகழ்வாக அமைந்தது.

Exit mobile version