மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் இந்த குளுகுளு நகரத்தில் முகாமிட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் நிலவி வந்த கடுமையான உறைபனியின் தாக்கம் தற்போது சற்று குறைந்துள்ள நிலையில், இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்தச் சூழலை அனுபவிக்க வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நகரின் முக்கிய நுழைவு வாயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கண்டு ரசிப்பதுடன், மேகக் கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் கோக்கர்ஸ் வாக் பகுதியிலும் உற்சாகமாக நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வெள்ளி நீர்வீழ்ச்சியின் ஆர்ப்பரிப்பை ரசித்த பயணிகள், இயற்கை எழில் சூழ்ந்த மன்னவனூர் சுழல் சுற்றுலா மையம் மற்றும் பேரிஜம் ஏரி பகுதிகளுக்குச் சென்று இயற்கை அழகைப் பருகினர். கொடைக்கானல் ஏரிச் சாலையில் குதிரைச் சவாரி மற்றும் சைக்கிள் சவாரி செய்வதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யவும் மாவட்டக் காவல்துறை சார்பில் 23 முக்கிய இடங்களில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுப் போக்குவரத்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
















