விலை வீழ்ச்சி மற்றும் வறட்சியைச் சமாளிக்கப் மிளகாய் பயிரில் அகத்தி கீரை ஊடுபயிர் சாகுபடி தீவிரம்

தேனி மாவட்டம் போடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் நிலையற்ற தட்பவெப்ப நிலை மற்றும் சந்தை விலை மாற்றங்களைச் சமாளிக்க, விவசாயிகள் பச்சை மிளகாய் மற்றும் பருத்தி பயிர்களில் அகத்தி கீரையை ஊடுபயிராகச் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். போடி அருகேயுள்ள விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், சிலமலை, அம்மாபட்டி, ராசிங்கபுரம் மற்றும் தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக மிளகாய் சாகுபடியில் திடீர் விலை வீழ்ச்சி ஏற்படும்போது விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இத்தகைய பொருளாதாரப் பாதிப்புகளைச் சரிசெய்யவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் அகத்தி கீரை சாகுபடி ஒரு சிறந்த மாற்றாக அமைந்துள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

அகத்தி கீரை சாகுபடியானது விவசாயிகளுக்கு இருவகை நன்மைகளை வழங்குகிறது. ஒருபுறம் நன்கு வளர்ந்த அகத்திச் செடிகளை வெட்டி நிலத்திலேயே புதைத்து இயற்கை உரமாக மாற்றுவதன் மூலம், அடுத்தடுத்த சாகுபடி பயிர்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து அதிக மகசூல் கிடைக்கிறது. மறுபுறம், அகத்தி கீரை மற்றும் அதன் குச்சிகளுக்கு உள்ளூர் சந்தைகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், இதனை விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் உபரி வருமானம் கிடைக்கிறது. பருவமழை பொய்த்துப் போகும் காலங்களிலும், மிளகாய் மற்றும் பருத்தி பயிர்கள் போதிய பலன் தராத நிலையிலும், குறைந்த நீரில் வளரக்கூடிய அகத்திச் செடிகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் அரணாகத் திகழ்கின்றன.

இது குறித்துப் பகுதி விவசாயிகள் கூறுகையில், “பருத்தி மற்றும் மிளகாய் பயிரிடும்போது உரிய மழை கிடைக்காத காலங்களில் நாங்கள் பெரும் இழப்பைச் சந்திக்கிறோம். அந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்கவே, எப்போதுமே பலன் தரக்கூடிய அகத்தி கீரையை ஊடுபயிராக நடுகிறோம். இது மண்ணுக்குத் தேவையான தழைச்சத்தை வழங்குவதுடன், ஆடு மற்றும் மாடுகளுக்குச் சிறந்த தீவனமாகவும் பயன்படுகிறது. மிளகாய் செடிகளுக்கு இடையில் அகத்தி வளர்வதால் அது ஒரு பாதுகாப்பான நிழலையும், தட்பவெப்பத்தையும் வழங்குகிறது” எனத் தெரிவித்தனர். நவீன ரசாயன உரங்களின் விலை உயர்ந்து வரும் சூழலில், இத்தகைய பாரம்பரிய ஊடுபயிர் சாகுபடி முறை இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், விவசாயிகளின் லாபத்தையும் உறுதி செய்வதால் போடி பகுதி விவசாயிகளிடையே இந்த முறை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version