சென்னை :
2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 தொடர் பரபரப்பாக நடந்து வருகின்றது. இதில் 8 அணிகள் கோப்பைக்காக மோதியுள்ளன. லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இதில் பங்கேற்றன.
மொத்தம் 28 லீக் போட்டிகள் முடிவில், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றன.
7 லீக் ஆட்டங்களில் அனைத்திலும் வெற்றி பெற்று தோல்வியின்றி பிளேஆஃப்ஸ் சென்ற அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸிடம் வீழ்ந்தது.
திருப்பூர் தமிழன்ஸின் வரலாற்றுச் சாதனை :
சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, இந்த வெற்றியின் மூலம் TNPL வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது. அமித் சாத்விக் மற்றும் சசிதேவ் ஆகியோர் அரைசதமடித்து அணியை பலப்படுத்தினர். குறிப்பாக, சசிதேவ் 26 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
பின்னர், 203 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில், கேப்டன் அபராஜித்தைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைத்தும் வீழ்ந்தனர். 30 ரன்கள் மட்டுமே எடுத்த அபராஜித் வெளியேறியதும், சேப்பாக் அணி 113 ரன்னில் சுருண்டது.
பந்துவீச்சில் எசக்கிமுத்து மற்றும் மதிவாணன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, 79 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு அபார வெற்றியை ஏற்படுத்தினர்.
இன்றைய எலிமினேட்டர் ஆட்டம் :
இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் ஆட்டத்தில், ஆர். அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ஜெயராமன் தலைமையிலான திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தின் வெற்றியாளர், குவாலிஃபையர் 2-ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸை சந்திக்கவுள்ளார்