திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர முக்கிய உற்சவங்களில் ஒன்றான ஆனிவார ஆஸ்தானம் இந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ஜூலை 15ம் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் ஆனி மாத ஆரம்பத்தில் நடைபெறும் இந்த ஆனிவார ஆஸ்தானம் விழாவின்போது, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் புஷ்ப பல்லக்கில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பαλிக்கிறார். இந்த வருடமும், ஜூலை 16-ம் தேதி மாலை 6 மணிக்கு உலா நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சேவைகள் மற்றும் தரிசனங்களில் மாற்றம்.
ஆழ்வார் திருமஞ்சனமும் ஆனிவார ஆஸ்தானமும் நடைபெறுவதால், ஜூலை 15 மற்றும் 16 தேதிகளில் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன குறிப்பாக :
ஜூலை 15 : அஷ்டதலபாத பத்மாராதனை சேவை ரத்து.
ஜூலை 16 : கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை அனைத்தும் ரத்து.
ஜூலை 14 முதல் 16 வரை: விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.
பக்தர்கள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு, தேவஸ்தான நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பக்தர்கள் திரள் :
மீண்டும் திருப்பதியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்வ தரிசன வரிசையில் பக்தர்கள் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
கடந்த சில தினங்களில் வந்த பக்தர்கள் விவரம் பின்வருமாறு :
ஜூலை 08: 78,320 பேர்
ஜூலை 09 : 76,501 பேர்
ஜூலை 10 : 63,473 பேர்
ஜூலை 11 : 70,217 பேர்
பக்தர்கள் காத்திருக்கும் அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால், சிலாத்தோரணம் வாயில் வரை வரிசை நீண்டுள்ளது.
தினசரி உண்டியல் காணிக்கையாக ரூ.4.39 கோடி முதல் ரூ.4.66 கோடி வரை வசூலாகி வருகிறது.
ஆனிவார ஆஸ்தானம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கருட பஞ்சமி போன்ற உற்சவங்களால், எதிர்வரும் நாட்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதற்கமைய தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் முழு வீச்சில் முன்னெடுத்து வருகிறது.