மணிகண்டேஸ்வரர்ட திருக்கோவில் காஞ்சிபுரம் – அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
ஹரியாகிய திருமாலும், ஹரனாகிய சிவனும் அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் திருமால்பேறு என்னும் திருமால்பூர் என்று அழைக்கப்படுகிறது.
ஹரிசக்ரபுரம், வில்வாரண்யம், உத்திர காஞ்சி என்றெல்லாம் போற்றப்பட்ட இத்தலத்தில் பழம்பாலாறு என்னும் விருத்தகஷீர நதிக்கரையில் அன்னை பார்வதிதேவி செம்மண்ணால் லிங்கம் பிடித்து வழிபட்டு வந்தாள்.
ஒரு சமயம் நதியில் வெள்ளம் பெருக்கெடுக்க, அம்பாள் லிங்கமூர்த்தியை ஆலிங்கனம் செய்தாள். அப்போது அம்பாளின் முத்துமணி மாலை ஐயனின் கழுத்தில் அழுத்த, மணி பதிந்த கண்டம் உடையவர் மணிகண்டீஸ்வரர் ஆனார்.
ஆதியில் காஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த மன்னன் குபனும், முனிவரில் சிறந்தவரான வஜ்ஜிர தேகம் கொண்ட ததீசி முனிவரும் நீண்ட நாட்களாக நட்புடன் இருந்து வந்தனர். ஒரு சமயம் மன்னன் குபனுக்கும் ததீசி முனிவருக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
மன்னன் குபனுக்கும் வாக்குவாதத்தினால் எதிர்ப்பு உண்டாகி, அது போராக மாறியது. குபன் தன்னால் இயன்றவரை ததீசியிடம் போரிட்டு, கடைசியில் பலம் குறைந்தான். குபன் தனது உற்ற தெய்வமான ஸ்ரீமந்நாராயணரை வேண்டினான்.
திருமால் அவன் சார்பாக போர்க்களம் புகுந்து, ததீசியின் மேல் சக்கராயுதத்தை ஏவினார். ஆனால் ததீசியின் உடல் வஜ்ஜிரத் தன்மைக் கொண்டதால் மகாவிஷ்ணு ஏவிய சக்கரம் அவனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இதனால் திடுக்கிட்ட திருமால், தேவர்களைக் கூப்பிட்டு ஆலோசித்தபோது சிவபெருமான் ஜலந்தர அசுரனை வதைக்க சுதர்சன சக்கரம் ஏற்படுத்தியதை அறிந்தார். உடன் பூவுலகு வந்தார். குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த தலமான கோவிந்தவாடி அகரம் வந்து, சைவராய் மாறி, சிவதீட்சை பெறுகிறார்.
பின் பாலாற்றங்கரையில் தென்பால் அம்பிகை செம்மண்ணால் பிடித்து வழிபட்ட லிங்கத்தை செந்தாமரை மலர்களால் ஒரு திருநாமத்திற்கு ஒரு மலரென ஆயிரம் திருநாமங்களுக்கு ஆயிரம் மலர்களால் நித்தமும் பூசனைப் புரிந்தார் புருஷ்ஷோத்தமர்.

ஒருநாள் அர்ச்சனையின் முடிவியல் ஒரு செந்தாமரை மலரை மறைத்தருளினார் மகேசன். 999 நாமங்களுக்கு 999 மலர்களை சமர்ப்பித்த கோவிந்தன், ஒரு மலரினைக் காணாமல் திடுக்கிட்டார்.
‘அர்ச்சனையை முடித்தாக வேண்டும் என்ன செய்வது?’ என்று திகைத்த அடுத்த கணம் தனது வலது கண்ணையே பெயர்த்து மலராக பாவித்து, ஈசனது திருப்பாதங்களில் சமர்ப்பித்தார். அதனால் கண்ணப்பருக்கும் முன்னவர் ஆனார் திருமால்.
தாமதிக்காத ஈசன், நீண்ட செம்மேனியராய், பேரொளிப் பிரகாசமாய் திருமாலுக்குக் காட்சி தந்து, சுதர்சனமென்னும் அற்புத சக்கரத்தை திருமாலுக்கு அருளினார். அதோடு, இழந்த கண்ணையும் வழங்கி, ‘இது முதல் நீர் செந்தாமரைக் கண்ணன் என்று போற்றப்படுவாய் நீர் மெய்யன்போடு வழிபட்ட இந்தப் பதி ‘திருமாற்பேறு‘ என்று வழங்கப்படும்.
இத்தலத்தில் ஒரு நொடிப் பொழுது தங்கியவருக்கும் எல்லா நலன்களும் கிட்டும் எனக் கூறி, மூன்று உலகங்களை காத்து ரட்சிக்கும் வரத்தையும், அத்துடன் இத்தலத்தில் ஒரு நொடிப் பொழுது தங்கியவருக்கு காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவதலங்களையும் தரிசித்த புண்ணியத்தையும் அவருக்கு வழங்கி அருள்புரிந்தார்
மேலும் அவர் திருமாலிடம், “நீ கூறி வழிபட்ட ஆயிரம் திரு நாமங்களால் என்னை பூசிப்பவர்களுக்கு முக்தியைக் கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை, தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன்” என்று கூறி அருளினார்.
திருமால்பூர் கோவிலின் மற்றுமொரு வரலாறு உண்டு, ஒருமுறை சிவனுக்கும் பார்வதிக்கும் தமக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென பார்வதிதேவி, பரமேஸ்வரனின் கண்களை தன் கரங்களால் மூடினார்.
அது ஒரு கண நேரம்தான் என்றாலும், மற்ற உலகங்களில் அது பல யுகங்களாக நீடித்தது. சிவனின் கண்களாக அறியப்படும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களும் மூடப்பட்டதால், உலக உயிர்கள் அனைத்தும் வதைபட்டன.
உலகம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தன் விளையாட்டு வினையாகி விட்டதை உணர்ந்த பார்வதிதேவி, தன்னால் உலகம் சந்தித்த விளைவை எண்ணி வருந்தினார். தன் தவறுக்கு பரிகாரம் வேண்டினார்.
உடனே சிவபெருமான், “நீ பூலோகம் சென்று தவம் செய்” என்றார். அதை ஏற்று பூலோகம் வந்த பார்வதி, பாலாற்றின் கரையிலிருந்த வில்வ மரத்தடியில் மணல் லிங்கம் அமைத்து வழிபட்டதோடு, 32 தருமங்களையும் வளர்த்தார்.
தேவியின் தவத்தில் மனம் குளிர்ந்த ஈசன், அவரைத் தேடிவந்து “பார்வதி” என்று அழைத்தார். சிவ சிந்தனையில் ஆழ்ந்திருந்ததால், ஈசனின் குரல் பார்வதி தேவியின் மனதிற்குள் நுழையவில்லை. தன்னை அலட்சியம் செய்வதாக எண்ணிய இறைவன், பார்வதியின் தவத்தை கலைப்பதற்காக, தம் தலையில் இருந்த கங்கையை தூக்கி பாலாற்றில் விட்டார்.
இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தேவியின் தவம் கலைந்தது. திடீரென்று வந்த வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் சென்றுவிடாமல் இருக்க, அதை இறுக்கமாக தழுவியபடி இருந்தார், பார்வதிதேவி. மேலும் தனக்கு உதவும்படி தன் அண்ணனை அழைத்தார்.
தங்கையின் குரல் கேட்டு அங்கு வந்த பெருமாள், ஆற்றின் குறுக்காக சயனக் கோலத்தில் படுத்து, பாலாற்றை தெற்கு நோக்கி பாயச் செய்தார். அதன் பின் சிவ பூஜையை நிறைவு செய்தார் பார்வதி. இதையடுத்து பார்வதிக்கு காட்சி தந்து, அவரை ஏற்று கயிலை திரும்பினார் சிவபெருமான்.
மேலும் திருமால்பூர் மணிகண்டேஸ்வரர்ட திருக்கோவில் பற்றி மேலும் சுவாரஸ்மான தகவல்களை நாம் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்..