சேன்ற பாகத்தில் பல அரிய தகவல்களை பார்த்தோம் மேலும் இந்த ஆலயத்தின் புதிய தகவல்களை நாம் பார்ப்போம்.
இந்த ஆலயத்தில் கருவறை முன் வல்லபை விநாயகர் பத்து கரங்களுடன் அருள்புரிகின்றார்.
கருவறை, அதனுள் ருத்திராட்ச பந்தலின் கீழே, கிழக்கே திருமுகம் கொண்டு, அம்பிகை தன் கரங்களால் பிடித்த செம்மண் லிங்கமாய் தரிசனமளிக்கின்றார். பார்வதிதேவியால் விருத்தக்ஷர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட இலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க இலிங்கத்தின் மீது, குவளை சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் செந்தாமரைக் கண்ணப்பெருமாள்” என்ற நாமத்துடன் உள்ளார். மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார்.
வலப்புறம் சக்கர தீர்த்தக் குளம் உள்ளே விசாலமான வெளிப் பிராகாரம். வலப்பக்கம் இறைவி அஞ்சனாட்சியின் தனிச்சன்னதி. உள்ளே யோகமுடி தரித்து நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் புன்னகை சிந்தும் அம்பிகையின் திருக்கோலம். எட்டு லட்சுமிகள், எட்டு யானைகள், எட்டு நாகங்கள், எட்டு சிங்கங்கள் புடைசூழ நடுவில் மகாமேரு இப்படியான பஞ்சாம்ச பீடத்தின் மீது நின்று அபயமளிக்கிறாள் அன்னை அபூர்வ அமைப்பு.

ராஜ கோபுரத்திற்கு நேராக உயரமான மேடையமைப்பு நேராக பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்திதேவர். இரண்டாம் வாயிலுள் நுழையும் முன் கணபதி மற்றும் சுப்ரமண்யரை தரிசனம் செய்யலாம். வாயிலின் உள்ளே இடப்புறம் நின்ற நிலையில் கரம் குவித்து வணங்கும் அதிகார நந்தி, துவாரபாலகர்கள் மூன்றாம் வாயிலுக்கு வெளியே காவல் புரிகின்றனர்.
சில படிகள் ஏறி, வாயில் கடந்து உள்செல்ல மகாமண்டபத்தில் பிரதோஷ நந்திக்கு முன் மகாவிஷ்ணு சங்கு சக்கரதாரியாய் இரு கரங்களையும் கூப்பி ஈசனை வணங்கும் நிலையில் அருட்தரிசனம் அளிக்கின்றார்.
வலப்புறம் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அவற்றுள் திருமால் தனது வலக்கரத்தில் கண்ணுடனும், இடக்கரத்தில் செந்தாமரை மலரும் ஏந்தியபடி அற்புதக் காட்சி தருகின்றார்.
உட்பிராகார வலம் வருகையில் அழகிய கல் கட்டிடத்தின் நேர்த்தியான அமைப்பு நம்மை வசீகரம் செய்கிறது.
முதலில் சூரியன். அருகே சோழர்கள் இந்த ஆலயத்தைக் கட்டினார்கள் என்பதற்குச் சான்றாக பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். பின்னர் நால்வரது திவ்யமான தரிசனம். தென்புறத்தில் சப்த மாதர்கள், தென்மேற்கில் பாலகணபதி மற்றும் உச்சிஷ்ட கணபதி என இரட்டை பிள்ளையார்கள் கொலு வீற்றுள்ளனர். அடுத்ததாக வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமண்யர், கஜ லட்சுமி, சோமாஸ்கந்தர் என வரிசையாக அருள்பாலிக்கின்றனர்.
அதேபோல் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை இங்கு எட்டுக் கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கையாக அருட்காட்சியளிக்கிறாள். சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். வடகிழக்கு மூலையில் பள்ளியறையுள்ளது.
தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தங்களாக ஆலயத்தின் எதிரில் இருக்கும் சக்கர தீர்த்தமும், ஊரின் வடக்கே பாயும் பழம்பாலாறும் விளங்குகின்றன.
பராந்தகச் சோழனால் கி.பி. 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம் சோழர்கால கல்வெட்டுகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் உள்ள காமக் கோட்டத்தின் வட பகுதியான வல்ல நாட்டிலுள்ள திருமாற்பேறு என்று, ராஜகேசரிவர்மன் தரிபுவன சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன் காலத்தில் சோழன் காலத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
அதில் இறைவன் பெயர், திருமாற்பேறுடையார், அவிமுக்தீஸ்வரமுடையார் எனப் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருமுறை ராவணன் தன் புஷ்பக விமானத்தில் வடதிசை நோக்கிப் பறந்து கொண்டிருந்தான் திடீரென பறக்க முடியாமல் விமானம் நின்றுவிட்டது.
அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள ராவணன் புஷ்பக விமானத்தை விட்டு கீழே இறங்கினான். அப்போது அவன் முன் அப்போது நந்தியெம்பெருமான் தோன்றி, ராவணா, நீ நின்று கொண்டிருப்பது சிவபெருமான் வாழும் கயிலாய மலைப் பகுதி.
சிவபெருமான் தவத்தில் உள்ளார். நீ அவருக்கு இடையூறு செய்யாதே. உன்போல் ஆணவம் கொண்டவர்களால் இந்த மலையைக் கடந்து செல்ல இயலாது. எனவே, நீ மலையைச் சுற்றிக்கொண்டு பறந்து போ என்றார்.
அதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராவணன், குரங்கு போன்ற தோற்றம் கொண்ட நீயா என்னைத் திரும்பிப் போகச் சொல்கிறாய்? என் பராக்கிரமத்தை நினைத்துப் பார்க்காமல் என்னை இழித்துப்பேசிய நீ யார்? என்று கேட்டான்.
ராவணன் அப்படி கேட்டதும், நந்தியின் முகம் குரங்காக மாறியது இதைக் கண்ட நந்தி “ராவணா என்னை குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் ஒரு குரங்கால் அழிந்து போகும்” என்று சபித்தார். அதைக்கேட்டு ராவணனின் கோபம் மேலும் அதிகரித்தது.
இந்த மலையை கிள்ளி எறிந்துவிடுகிறேன் பார் என்று சூளுரைத்தவாறு, கயிலைமலையை அடியோடு பெயர்க்கத் தொடங்கினான், ராவணன். இதைக் கண்ட சிவபெருமான், மலையின் அடியில் ராவணனை சிக்கவைத்து, தன் கால் கட்டை விரலால் மலையை அழுத்திக் கொண்டார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக அதில் இருந்து ராவணனால் மீள முடியவில்லை. தவற்றை உணர்ந்த அவன் தன் தலையைக் கிள்ளி குடமாக்கி, ஒரு கையை தண்டமாக்கி, நரம்புகளால் தந்தி செய்து ஒரு வீணையை உருவாக்கினான்.
அதன் மூலம் சாம கானம் இசைத்தான். இதில் மனம் கரைந்த சிவன், ராவணனை விடுவித்தார். இருப்பினும், நந்தி கொடுத்த சாபம் ராவணனைத் தொடர்ந்து அதனால்தான் ஆஞ்சநேயரால், இலங்கை நகரம் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் குரங்கு முகம் கொண்ட அதிகார நந்தியை நாம் தரிசிக்கலாம். இவரை தரிசித்த பிறகே, மூலவரை வழிபடச் செல்ல வேண்டும் என்ற வழிபாட்டு நியதியும் இங்கே உள்ளது.
இத்தல மகிமைகளை சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் தொண்டை நாட்டு திருத்தலங்களில் இது 11வது திருத்தலமாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் போன்ற பெருமைகளைக் கொண்ட இத்தலம் திருமால் பூஜித்த காரணத்தால் இங்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி சாற்றப்படுகிறது.
அத்தோடு மூவருக்கு தீபாராதனை காட்டியபின், எதிரில் இருக்கும் திருமாலுக்கும் தீபாராதனை காட்டப்படுவது சிறப்பு. சிவன் கோவில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரே சிவதலம் என்பது வியப்புக்குரியதாகும்.
உலகில் முக்கிய எட்டு அதிகார நந்திகளுள் இத்தல நந்தியும் ஒன்றாகத் திகழ்கிறது. கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக மாசிமகம் நடக்கும் புராணபெருமை பெற்றது இச்சிவ திருத்தலம்.
பௌர்ணமி தோறும் அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. இந்த கோவிலில் பெருமாள் வணங்கி, சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.
பக்தர்கள் வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தினசரி மூன்று கால பூஜைகள் நடந்திடும் இவ்வாலயம், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து சிவாலய விசேஷங்களும் இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன.
இக்கோவிலில் மாசி மாதம் நடக்கும் 10 நாள் பிரமோத்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடக்கும். இந்த திருவிழாவில் தான் பெருமாளுக்குரிய கருட சேவையும் நடக்கிறது.
ஆடி வெள்ளி, ஆடிப் பூரம், ஆனித் திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரையும் இங்கு விசேஷேம். தமிழ்ப் புத்தாண்டு, ஆனி உத்திரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் என பல பண்டிகைகள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன்.
 
			















