கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையிலிருந்து கேரளா செல்லும் விமான டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்து பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிகோடு, கண்ணூர் உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் அதிகளவில் பயணம் செய்ய முன்வந்துள்ளனர்.
இதன் விளைவாக விமான டிக்கெட் விலைகள் சாதாரணத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளன. சாதாரணமாக ரூ.4,359 ஆக இருந்த சென்னை – திருவனந்தபுரம் விமான கட்டணம் தற்போது ரூ.19,903 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னை – கொச்சி டிக்கெட் விலை ரூ.3,713 இருந்து ரூ.11,798 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து கோழிகோடு செல்லும் கட்டணம் ரூ.3,629 இருந்த நிலையில் தற்போது ரூ.10,286 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னை – கண்ணூருக்கு செல்லும் கட்டணம் ரூ.9,923 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தாயகத்தை நோக்கி அதிக அளவில் பயணம் செய்வதால்தான் இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
















