பெங்களூரு – சேலம் – கேரளா இடையே 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – முன்பதிவு விறுவிறுப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பெங்களூரு போன்ற மாநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக, தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வே சார்பில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாகக் கேரள மாநிலம் கண்ணூர் மற்றும் கொல்லத்திற்கு மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெங்களூரு – கண்ணூர் இடையேயான சிறப்பு ரயில் (வண்டி எண்: 06575) நேற்று இரவு தனது சேவையைத் தொடங்கியது. இதன் மறுமார்க்கமான கண்ணூர் – பெங்களூரு சிறப்பு ரயில் (06576) இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்குக் கண்ணூரில் புறப்பட்டு, இரவு 8.50 மணிக்குச் சேலம் வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை (ஞாயிறு) அதிகாலை 4.10 மணிக்கு பெங்களூருவைச் சென்றடையும்.

அதேபோல், பெங்களூரு – கொல்லம் இடையேயான சிறப்பு ரயில் (06219) வரும் ஜனவரி 13-ஆம் தேதி இரவு 11 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக அடுத்த நாள் அதிகாலை 3.15 மணிக்குச் சேலம் வந்தடையும். தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் வழியாக அன்று மாலை 4 மணிக்குக் கொல்லம் சென்றடையும். இதன் மறுமார்க்கமான கொல்லம் – பெங்களூரு சிறப்பு ரயில் (06220) ஜனவரி 14-ஆம் தேதி மாலை 6.30 மணிக்குக் கொல்லத்தில் புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 5.20 மணிக்குச் சேலம் வழியாகப் பெங்களூரு சென்றடைகிறது.

மேலும், மற்றொரு பெங்களூரு – கண்ணூர் சிறப்பு ரயில் (06577) ஜனவரி 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, இரவு 9.27 மணிக்குச் சேலம் வந்தடைகிறது. இந்த ரயில் அடுத்த நாள் காலை 7.50 மணிக்குக் கண்ணூர் சென்றடையும். இதன் மறுமார்க்க ரயில் (06576) ஜனவரி 14-ஆம் தேதி இயக்கப்படுகிறது. பொங்கல் விடுமுறையையொட்டி வழக்கமான ரயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், இந்தச் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்கப் பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version