“இலவச சலுகைகளால் மக்களை அடிமைப்படுத்தும் பழக்கம் தொடரக் கூடாது; இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் சமூக நீதி” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தினார்.
கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தர்ராஜன் கல்லூரியில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் அவர் பேசுகையில்,
“இந்திய அரசியலமைப்பு 75 ஆண்டுகளாக நிலைத்திருக்கிறது என்பது பெருமை. ஒவ்வொரு குடிமகனும் அதை அறிந்து செயல்பட வேண்டும். உரிமைகளைப் பேசும் போது, கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும்,” என்றார்.
தேர்தல் முறையில் மக்களின் பொறுப்பை குறிப்பிட்ட அவர், “55% பேர் மட்டுமே வாக்களிக்கிறார்கள். பணம், பொருள் பெற்று வாக்களிப்பது ஊழலை நிலைநாட்டும். இலவச சலுகைகள் வாக்குகளை பெறும் கருவியாக மாறி விட்டது. உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே உதவி சென்றாக வேண்டும்” என்று கூறினார்.
இட ஒதுக்கீடு குறித்து அவர்,
“தமிழ்நாடு சமூக நீதிக்காக முதலாவதாக இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால், ஏற்கனவே அதனால் முன்னேறிய குடும்பங்கள் தொடர்ந்து அதனைப் பயன்படுத்தக் கூடாது. பின்னால் நிற்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” எனவும், “சாதி, பாகுபாடு, honour killing போன்றவை சமூக முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக உள்ளன; கல்வியே அவற்றை குறைக்கும் ஒரே வழி” எனவும் வலியுறுத்தினார்.
சமூக வலைதளங்கள் குறித்து எச்சரித்த அவர், “அதில் வரும் அனைத்தும் உண்மை என நம்ப வேண்டாம். தகவல்களை பரிசோதித்து மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்களைத் தடுப்பதில் தண்டனையின் கடுமை அல்ல, வழக்குகளை விரைவில் முடிப்பதே முக்கியம்” என்றார்.