கோவை:
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை சிவானந்தாகாலனி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆதிஇந்திய தேசிய லீக், இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் SIR திட்டத்தையும், பாஜக அரசையும் கண்டித்த முழக்கங்கள் எழுந்தன.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கரூர் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “SIR குறித்து எதிர்ப்பு தெரிவித்த முதல் தலைவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். IT, ED போன்ற அமைப்புகள் மூலம் அடக்கு முறையை முன்னெடுத்து தோல்வியைச் சந்தித்த பாஜக, இப்போது SIR வழியாக அதையே தொடர முயற்சிக்கிறது,” என தெரிவித்தார்.
“இந்திய தேர்தல் ஆணையம் அவசரமாக இந்த நடவடிக்கையை எதற்காக முன்னெடுக்கிறது என்பது கேள்விக்குறி. பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; அதே நிலையை தமிழகத்திலும் உருவாக்க முயல்கிறார்கள். பல்வேறு நலத்திட்டங்களை அளித்த திமுக அரசை மீண்டும் மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதே இதன் நோக்கம்.”
அதிமுக குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “SIR-ஐ ஆதரித்து கண்மூடி நிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, இதுவே அதிமுகவின் கடைசி தேர்தல் என நாம் நிரூபிக்க வேண்டும். 2026 தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் கூட அதிமுக–பாஜக கூட்டணி வெற்றி பெறக் கூடாது,” என வலியுறுத்தினார்.
மேலும், “கோவையில் அவினாசி மேம்பாலம், பெரியார் நூலகம், செம்மொழி பூங்கா போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்களை எம்.எல்.ஏ இல்லாமலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து SIR-ஐ முறியடித்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வைத்திருக்க வேண்டும்,” என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
