உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாகப் பாட வேண்டும் என மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உற்சாகம் அளித்த பாடலாக வந்தே மாதரம் சிறப்பிடம் பெற்றுள்ளது. பாங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இந்தப் பாடல், இப்போது 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசு, வந்தே மாதரம் 150ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை ஆண்டு முழுவதும் நடத்தத் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கடந்த 7ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விழா தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“நமது வீரர்கள் எதிரிகளின் சதித் திட்டங்களையும் தீவிரவாதத்தையும் முறியடிக்கும் போது, அவர்களின் மனதில் ஒலிப்பது ‘வந்தே மாதரம்’ என்ற மந்திரமே. இந்தப் பாடல் இந்தியாவை ஒன்றிணைக்கிறது, ஒற்றுமையை வலுப்படுத்துகிறது,”
எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, கோரக்பூரில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத்,
“வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதை எதிர்ப்பவர்கள் இந்தியாவை பிரிவினைப்படுத்த விரும்புபவர்கள்,” எனக் கூறினார்.
மேலும், பாரத மாதா மற்றும் தாய்நாட்டின் மீதான மதிப்பையும், நாட்டுப்பற்றையும் ஊட்டுவதற்காக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் ஒலிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வந்தே மாதரம் பாடலில் உள்ள சில வரிகளை 1937ஆம் ஆண்டு காங்கிரஸ் நிர்வாகக் குழு நீக்கியதாக பிரதமர் மோடி அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
