“வெற்றிமாறன் கிட்ட இந்த புள்ளப்பூச்சி மாட்டிச்சுனு…” – ‘மாஸ்க்’ ஆடியோ விழாவில் விஜய் சேதுபதி கலகல

கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் இயக்கியுள்ள ‘மாஸ்க்’ திரைப்படம் நவம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது: “விகர்ணன் பேசும் விதம் ரொம்ப அழகாக இருந்தது. இந்தப் படத்திற்கே வெற்றிமாறன் மெண்டர் என நினைத்தேன், மேடைப் பேச்சுக்கும் அவர் தான் வழிகாட்டியவர் போல இருந்தார். நாளைக்கு நானும் படம் எடுத்தால், எனக்கும் மெண்டராக இருக்கணும் சார்!

‘மாஸ்க்’ டிரெய்லர் பார்த்தவுடன் ரொம்ப பிடிச்சு. விடுதலை படத்தின் போது வெற்றிமாறன் இந்தப் படத்தைப் பற்றி சொன்னார். டைட்டில் கேட்டவுடன் என்ன சொல்லப்போகிறார்கள் என்று ஆர்வம் வந்தது. எம்.ஆர். ராதா சார் முகமூடி டைட்டில் டிசைனில் இருந்தது — அதுவே எதிர்பார்ப்பை கூட்டியது.

இந்த ஆடியோ லான்சே தனி டிரெய்லர் மாதிரி இருந்தது. எல்லாரும் அருமையாக பேசினார்கள். ராமர் பேச்சு செம்ம! விடுதலை படத்தின்போது ராமரைப் பார்த்து, ‘இந்த புள்ளப்பூச்சி இவரிடம் மாட்டிக்கிட்டுச்சே!’ன்னு நினைத்தேன். இப்போ பார்த்தால் அந்த ராமர் கிட்ட தானே எல்லாரும் மாட்டி இருக்காங்க!” என கலகலப்பாக கூறினார்.

அதுடன் அவர் கவினையும், ஆண்ட்ரியாவையும் பாராட்டியபோது,

“கவின் திரையில் ரொம்ப வசீகரமா இருக்கீங்க. சில படங்கள் தோற்கலாம், ஆனால் அது பயிற்சி தான். விழும் அடிதான் நம்மை மனதளவில் பலமாக்கும். இந்தப் படம் நல்லது நடக்கும் என நம்பிக்கை இருக்கு.

ஆண்ட்ரியா, நீங்க எத்தனை வருடம் ஆனாலும் அதே மாதிரி இருக்கீங்க! நரசூஸ் காபி விளம்பரத்தில பார்த்தபோதும் ‘யாரு இந்த பொண்ணு?’ன்னு நினைச்சேன். இப்போவும் அதே கேள்விதான்! நாளைக்கு என் பையனும் அப்படித்தான் கேப்பான் போல!” என்று நகைச்சுவையாகக் கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

இந்நிகழ்வில் வெற்றிமாறன், விகர்ணன், கவின், ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பேசினர்.

Exit mobile version