சென்னை :
“உலகம் எத்தனை வேகத்தில் ஓடுகிறதோ, அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்களுக்கு உற்சாகமாக அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்ற பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், 197 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, ‘ரிசர்ச் இன்க்யூபேஷன் கம்பெண்டியம்’ (Research Incubation Compendium) என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.
விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
“இன்று நீங்கள் கையில் ஏந்தியிருப்பது சாதாரண காகிதம் அல்ல; உங்கள் உழைப்பின் விளைச்சல். உங்கள் கனவுகளுக்கும் இலட்சியங்களுக்கும் இது ஒரு தொடக்கம். பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் பல திறமையான தலைவர்களை உருவாக்கி வந்துள்ளது. உங்கள் மூத்தவர்கள் பெரிய இடங்களில் உள்ளனர், அதுபோல நீங்கள் அனைவரும் உயர்ந்த இடங்களை அடைய வேண்டும்.”
“உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. திராவிட இயக்கம் உருவாக்கிய கல்வி அடித்தளத்தின் மீதே இன்று நமது முன்னேற்றம் அமைந்துள்ளது. கலைஞர் அவர்கள் தொடங்கிய கல்வித் திட்டங்களை, நமது திராவிட மாடல் அரசு ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்புதல்வன்’, ‘தகைசால் பள்ளி’, ‘காலை சிற்றுண்டி’ போன்ற பல திட்டங்களின் மூலம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.”
அதே நேரத்தில், தற்போதைய ஏ.ஐ (Artificial Intelligence) காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இந்த காலத்தில் நிலைத்து நிற்க, எதிர்காலத்தை கணிக்க தெரிந்திருக்க வேண்டும். வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் நடுவில் ஒழுக்கம் மிக அவசியம். எப்படிப்பட்ட சூழலிலும் நேர்மை, நம்பிக்கை, பொறுப்பை கைவிடக் கூடாது. எங்கு சென்றாலும் துணிச்சலாகவும் அறத்துடனும் செயல்பட வேண்டும்,” என்று முதல்வர் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.
முடிவில், “நீங்கள் நல்ல மனிதர்களாகவும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர்களாகவும் மாற வேண்டும். பெரிய கனவு காணுங்கள்; அதற்காக கடினமாக உழையுங்கள். நம் தமிழினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வாணிபத்தில் முன்னிலை பெற்றது. அந்த பாரம்பரியத்தை இன்றைய உலகிலும் தொடர நம்மால் முடியும்,” என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியுடன் கூறினார்.
