“விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி”: அருப்புக்கோட்டையில் அதிமுகவினர் அதிரடிப் பிரசாரம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரப் பகுதிகளில், அதிமுக சார்பில் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், முந்தைய அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கியும் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி” என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் அவர்களின் ஆலோசனையின்படி, அருப்புக்கோட்டை நகரக் கழகச் செயலாளர் சோலை சேதுபதி தலைமையில் இந்த நிகழ்வு எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் யூனுஸ் முகம்மது, நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் தேவராஜன் மற்றும் நகர அம்மா பேரவை இணைச் செயலாளர் துளசிராம் ஆகியோர் முன்னிலை வகித்து இந்தப் பிரசாரப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

திமுக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது, மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட மக்கள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், உட்கட்டமைப்புச் சாதனைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் விரிவான துண்டுப் பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்தத் துண்டுப் பிரசுரங்களை அருப்புக்கோட்டை நகரத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி (Booth) நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் வழங்கிய அதிமுகவினர், தற்போதைய ஆட்சியின் குறைகளைத் தோலுரித்துக் காட்டினர். குறிப்பாக, சாமானிய மக்களின் அன்றாடப் பொருளாதாரச் சுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் பிரசாரம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது.

இந்தச் சிறப்பு நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவைத் துணைச் செயலாளர் ராம்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் சின்னச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் சோலைராஜ் ஆகியோர் பங்கேற்றுத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். மேலும், மாவட்ட விளையாட்டு வீரர்கள் அணித்தலைவர் லெனின் வினோத் சிங், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் சக்தி ராஜா, நகரத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் அண்டா நாகராஜ், சீரணி ரமேஷ், தங்கம், ராம்சுந்தர் மற்றும் நகர நிர்வாகிகள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர். எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு அருப்புக்கோட்டை அதிமுகவினர் இப்போதே களத்தில் இறங்கித் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version