இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் எதிர்காலத்தைப் பற்றி முன்னாள் இந்திய கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ரோகித்-கோலி ஜோடி, தற்போது ஒருநாள் வடிவத்தில் மட்டுமே ஆடுகின்றனர். இவர்களின் இலக்கு 2027 உலகக் கோப்பை வரை அணியில் நீடிப்பதே. தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் சுப்மன் கில் தலைமையிலான அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஆனால், இந்த தொடரே இவர்களின் கடைசி தொடராக அமையுமா என்ற கேள்வி ரசிகர்களும் விமர்சகர்களும் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:
“விராட் கோலி சேஸிங்கில் வல்லவர். ரோகித் சர்மா தொடக்க ஆட்டத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர். இன்னும் இருவரும் தங்களிடம் திறமையும் சக்தியும் இருப்பதாக நம்புகின்றனர். எனவே, அவர்கள் உலகக் கோப்பை வரை விளையாடுவது அவர்களின் பசி, ஃபிட்னெஸ், மற்றும் விளையாட்டின் மீதான ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்,” என்றார்.
“தங்களது அனுபவம் காரணமாக, இந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு சுலபம். நான் அவர்களுக்கு சொல்ல விரும்புவது – ஒரு தொடரை ஒரே நேரத்தில் கவனியுங்கள். இந்த தொடரின் முடிவில் அவர்கள் தங்கள் மனநிலையை புரிந்துகொள்வார்கள். அதன்பிறகு முடிவு அவர்களுடையது. ஆனால், இளம் வீரர்கள் தங்களை முந்தி வருவதை அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.”
“கோலி, ரோகித் இருவரும் விளையாட்டை இனி ரசிக்கவில்லை என்றால், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் விலக முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து யாரும் அவர்களை விலகச் சொல்லவில்லை; அவர்கள் தாங்களாகவே முடிவு செய்தனர். அதுபோலவே ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர்கள் மகிழ்ச்சியின்றி விளையாடுவதாக உணர்ந்தால், தாங்களே விடைபெறுவார்கள்,” என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ரவி சாஸ்திரி, ரோகித்-கோலி இருவரும் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.