ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை திருவாரூரில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர் திருவாரூருக்கு வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வருவதாக திருவாரூர் மாவட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் சந்தானமேரி தலைமையில் காவலர்கள் திருவாரூர் முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவை சேர்ந்த கோகுல்நாத், திருவாரூரை சேர்ந்த வைகோ, சசிகலா மற்றும் அருள் முருகன் ஆகியோருடன் சிறுவன் ஒருவனும் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்ததை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடமிருந்து 12 கிலோ எடையுள்ள நான்கு கஞ்சா பண்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஒரிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வருவது உறுதியானது. இதனை அடுத்து அவர்கள் நால்வரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனுக்கு 18 வயது நிரம்பாததால் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்துதல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சடங்கு கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவர்களை திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது


