மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி வாயிலாக ஆஜராகினர். மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம் போல ஏற்றப்படும் இடங்களைத் தவிர்த்து, அங்குள்ள பழமையான தீபத் தூணிலும் டிசம்பர் 3-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், இதனை உறுதி செய்வது காவல்துறையின் கடமை என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இருப்பினும், அன்று மாலை உச்சிப் பிள்ளையார் கோவிலில் மட்டும் தீபம் ஏற்றப்பட்டு, தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாததால், நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாரர் மீண்டும் முறையிட்டார்.
இந்த விவகாரத்தை அவசர வழக்காக டிசம்பர் 3-ஆம் தேதியே மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் உள்ளிட்ட 10 நபர்கள் தீபத் தூணிற்குச் சென்று தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் (CISF) வீரர்களை அனுப்பவும் உத்தரவிட்டார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்பிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட நீதிபதி, இது தொடர்பாக விளக்கம் அளிக்கத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நடைபெற்ற விசாரணையின் போது தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொளி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை எனத் தலைமைச் செயலாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள இந்தத் தீபத் தூண் பல ஆண்டுகளாகச் சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வரும் நிலையில், அங்கு வழிபாட்டு உரிமையை நிலைநாட்டக் கோரித் தொடரப்பட்ட இந்த வழக்கு, தமிழக நிர்வாக மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
