திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை பூஜைகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில் பக்தர்கள் 3 நாட்களுக்கு மூலஸ்தானத்திற்கு சென்று மூலவரை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் கும்பாபிஷேகம் நடைபெறும் நாள், நேரம், உற்சவங்கள் போன்ற விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக மதுரை திருப்பரங்குன்றம் போற்றப்படுகிறது. திருச்செந்தூரைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்திலும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மூலஸ்தானத்திற்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமான், சூரனை போரிலே வதம் செய்த பிறகு, இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் திருப்பரங்குன்றம். இதனால், திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.இக்கோவில் பாண்டியர்களின் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ஆகும். உறுதியான கற்பாறையில் இறைவனின் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் மலையே லிங்க வடிவில் காட்சியளிக்கிறது. பரம்பொருளான சிவபெருமான் குன்று வடிவில் அருள்புரிவதால், சிவனுக்கு “பரங்குன்றநாதர்” என்றும், இந்த தலம் “திருப்பரங்குன்றம்” என்றும் பெயர் பெற்றது. இக்கோவில் ஒரு காலத்தில் சிவன் கோவிலாகவே இருந்துள்ளது. இப்போதும் விழாக்காலங்களில் சிவனுக்கே கொடியேற்றப்படுகிறது.
முருகப்பெருமான் குடைவரை மூர்த்தியாக இருப்பதால், மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. அவருக்குப் புனுகு மட்டும் சாற்றப்படுகிறது. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், முருகனின் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. அறுபடை வீடுகளில் இந்த சிறப்பு இங்கு மட்டுமே உள்ளது.பெரும்பாலும் முருகப்பெருமான் நின்ற கோலத்திலேயே அருள்பாலிப்பார். ஆனால் இங்கு அவர் அமர்ந்த கோலத்தில், தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்கும்பாபிஷேகம், 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 14ம் தேதி நடக்கிறது. இதற்காக ஜூலை 10ம் தேதியான நேற்று முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி, நடந்து வருகிறது. ஜூலை 14ம் தேதி காலை 05.25 மணி முதல் 06.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஜூலை 13ம் தேதி ஏழு கால யாகசாலை பூஜைகள் நடத்தி முடிக்கப்படும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஜூலை 13ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் வருவார்கள். ஜூலை 14ம் தேதி காலை பரிவார மூர்த்திகள், ராஜகோபுரம், விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். தேவசேனா உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த பிறகு பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெறும். அதற்கு பிறகு மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழியனுப்பும் நிகழ்ச்சிகள் நடைபெறும்
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நடந்து வருவதால் ஜூலை 10ம் தேதி மாலை முதல் ஜூலை 13ம் தேதி வரை தற்காலிகமாக பக்தர்கள் மூலஸ்தானத்திற்கு சென்று மூலவர் முருகப் பெருமானை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ம் தேதி கும்பாபிஷேகம் முடிந்து, சாந்தி பூஜைகள் நிறைவடைந்த பிறகே பக்தர்கள், முருகப் பெருமானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரை போல் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது முதலே திருப்பரங்குன்றத்திற்கு வந்து கொண்டிருப்பதால் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வது தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.