மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பெரும் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி சுவாமிநாதன், தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருந்தார்.
ஆனால், அந்த உச்சி பகுதியில் தீப ஏற்பாடுகளை செய்திருந்த கோயில் நிர்வாகம் திடீரென அதை ரத்து செய்தது. இதை எதிர்த்து இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா, பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட அமைப்புகள் 16-கால் மண்டபம் அருகே மறியலில் ஈடுபட்டன.
தடுப்புகளை மீறி மலைப்பகுதிக்குள் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். அங்கு அசாதாரண நிலை உருவானதை அடுத்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். தடையை மீறி போராட்டத்தில் இறங்கியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சியில் ஈடுபட்டதாக பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உட்பட 15 பேருக்கு எதிராக, திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், பொது சொத்து சேதப்படுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனி நீதிபதி வழங்கிய தீபம் ஏற்ற அனுமதி உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொண்டு, இன்று முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
மேலும், மனுதாரர் ராம் ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை நிறுத்திவைக்கவும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராகவும், மாவட்ட ஆட்சியர் சார்பில் தனி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இரண்டு மனுக்களும் இன்று ஜெயச்சந்திரன்–ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளன.
