புதுடில்லி:
திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஏற்றும் விவகாரம் நாடாளுமன்றத்திற்குள் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் உடனடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக எம்.பி.க்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை கண்டித்த ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், அரசு உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதே விவகாரம் பார்லிமென்டில் எழுப்பப்பட்டபோது, லோக்சபாவில், திமுக எம்.பி.க்கள் அளித்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்ததால், அங்கே கடும் கூச்சல் எழுந்தது. இதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில், சபாநாயகர் C.P. ராதாகிருஷ்ணன் திமுக எம்.பி.க்கள் சமர்ப்பித்த ஒத்திவைப்பு நோட்டீஸை நிராகரித்தார். இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக எம்.பி.க்கள் கூச்சல் எழுப்பி பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது அரசியல், சட்டம், மத உணர்வு என பலதளங்களில் சூடுபிடித்துள்ளதால், இது மேலும் எந்த திசையில் நகரும் என்பது கவனத்தை பெற்றுள்ளது.

















