உலகப்புகழ் பெற்ற திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னதாக, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலையில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவு செயல்படுத்தப்படாததோடு, அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கிரி மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆகியோர் பதில் மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், திருப்பரங்குன்றத்தில் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையைத் தவிர்க்கவும், பொது அமைதியைப் பாதுகாக்கவும் மட்டுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. “நீதிமன்ற உத்தரவுகளை நீர்த்துப்போகச் செய்யும் எண்ணம் எள்ளளவும் இல்லை; சட்டத்தின் ஆட்சியை மிகவும் மதிக்கிறேன். ஒருவேளை நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட இந்தத் தடை உத்தரவு, நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகக் கருதப்பட்டால், அதற்காக நான் நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஆட்சியர் தனது மனுவில் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அடுத்த கார்த்திகை தீபத் திருவிழாவிற்குள் உரிய தீர்வு எட்டப்படும் என்றும், எனவே இந்த அவமதிப்பு வழக்கைக் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “நான் ஏற்கெனவே தீபம் ஏற்றிய இடத்தில் ஏற்றச் சொல்லவில்லை; இந்துக்களுக்குச் சொந்தமான பகுதியில் ஏற்றத்தான் உத்தரவிட்டேன். ஆனால், அதைச் செய்யாமல் 144 தடை போட்டது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே, இந்து அமைப்புகள் தரப்பு வழக்கறிஞர்கள், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ரகுபதி ஆகியோரின் கருத்துக்கள் திட்டமிட்டுத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைக் காட்டுவதாக வாதிட்டனர். இதற்குப் பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், முதலமைச்சர் நீதிமன்ற உத்தரவு குறித்து எந்தத் தவறான கருத்தையும் தெரிவிக்கவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
விசாரணையின் இறுதியில் ஒரு சமரசத் தீர்வை முன்வைத்த நீதிபதி, “தற்போது ஐந்து பேரை மட்டும் மலை உச்சிக்குச் செல்ல அனுமதித்து சில நிமிடங்கள் பூஜை நடத்த அனுமதிப்பீர்களா? அப்படிச் செய்தால் இந்த வழக்கை இப்போதே முடித்து வைக்கிறேன்” என்று ஆட்சியரிடம் கேட்டுச் சொல்லுமாறு அரசுத் தரப்பிடம் கூறினார். இதற்குப் பதில் அளிக்கக் கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, நாளை (மார்ச் 4) மாலை 4 மணிக்குள் இது குறித்து அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். நாளை நடைபெறும் விசாரணையின் போது மதுரை மாநகரக் காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் ஆகியோர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம், அமைச்சர் ரகுபதிக்கு எதிரான அவமதிப்பு மனுவை நீதிபதி முடித்து வைத்தார்.
