மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் காமராஜர் நகர் மற்றும் எஸ்.ஏ.எல். நகரில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உரிய வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படாததால் அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஒருமுறை கனமழை பெய்தால் தண்ணீர் வடிவதற்கு ஒரு மாதம் ஆகிறது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்வதிலும், முதியோர் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தேவைகளுக்காக வெளியில் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இதே பிரச்சனையை சந்திக்க வேண்டி இருப்பதால் உடனடியாக தங்கள் பகுதிக்கு வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர்.
